Sunday, May 24, 2015

Coverage in Dinamalar- சென்னையில் பாரம்பரிய விதை கண்காட்சி



தி.நகர்: சென்னையில் நடைபெற்ற பாரம்பரிய விதை கண்காட்சி, சென்னைவாசிகளை பெரிதும் கவர்ந்தது.
தி.நகர், தக்கர்பாபா வித்யாலயாவில் நேற்று மாலை, பாரம்பரிய விதை கண்காட்சி நடைபெற்றது. காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறு, குறு, தானியங்கள், மூலிகைகள் உள்ளிட்ட வற்றின் பாரம்பரிய விதைகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. வரகு, சாமை, திணை, கேழ்வரகு, எள், ஆலி, பச்சை பயறு, உளுந்து, துவரை, கொள்ளு உள்ளிட்டவற்றில் தயாரான நொறுவைகள், இனிப்பு பதார்த்தங்கள், பானங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களின் விற்பனை அரங்குகள் இடம்பெற்று இருந்தன. மதுரை, திண்டுக்கல், சேலம், விழுப்புரம், திருச்சி, முசிறி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் இயற்கை விவசாயிகள் அரங்குகளை அமைத்து இருந்தனர். பஞ்சகவ்யா, தேங்காய் நார், உயிர் உரங்கள், செடிகள் போன்றவையும் விற்பனை செய்யப்பட்டன. மேலும், இயற்கை முறையில், வீட்டு தோட்டம் அமைப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் பேசியவர்கள், 'இயற்கை விவசாயம் செய்து நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். மகசூலில் பாதியை இரண்டாக பிரித்து, உணவுக்கும் விற்பனைக்கும் ஒதுக்கி விட்டு, மறுபாதியை இரண்டாக பிரித்து, தானத்திற்கும், விதைக்கும் வைத்தனர். பஞ்ச காலங்களில் விதை தட்டுப்பாடு ஏற்பட்டால் சமாளிக்க, வீட்டு நிலைப்படிகளுக்கு கீழும், கோபுரங்களிலும் சேமித்து வைத்தனர்' என தெரிவித்தனர். மேலும், இயற்கை விவசாயிகள், வெள்ளை சர்க்கரை, மைதா, பாக்கெட் பால் உள்ளிட்ட வற்றால் ஏற்படும் தீமைகளையும், விவசாய புரட்சியினால், சிறு, குறு விவசாயிகள், மண் வளம், நீர் வளம், கால்நடை வளம் அழிந்து, விதை, இடுபொருள், பூச்சிக்கொல்லிகளுக்காக அயல்நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலையை பற்றியும் கூறினர். நம் பாரம்பரிய விதைகளையும், விவசாயத்தை யும் பாதுகாப்பது மட்டுமே, நம் நாட்டையும் விவசாயிகளையும் காக்கும் வழிமுறை என வலியுறுத்தினர். பாரம்பரிய விதைகள் பற்றியும், மாடித்தோட்டம் அமைப்பது குறித்தும், ஏராளமானோர் ஆர்வத்துடன் கேட்டறிந்து விதைகளை வாங்கிச் சென்றனர்.

No comments: